தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.. பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தமிழர்களின் பாரம்பரிய விழாவான தை பொங்கல் விழா, போகி பொங்கல், தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் அதில் முதன்மை பெறுவது பொங்கல் விழா.
பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதேபோன்று கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மதநல்லிணக்கத்துடன் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
அப்போது, பாரம்பரிய உடை அணிந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் முளைப்பாரி மற்றும் பொங்கல் பானைகளை மேள, தாளத்துடன் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, உறியடித்தல், கயிறு இழுத்தல், கரும்பு உடைத்தல், கோலப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மேலும், மாணவர்கள் ஆடி, பாடி கொண்டாடுவதற்காகக் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.