மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம்.. அதிகாரிகள் அலட்சியத்தால் விபத்து ஏற்படும் அபாயம்! - உத்திரமேரூர் சாலை
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில், அங்காளம்மன் கோயில் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணியை சமீபத்தில் மேற்கொண்டனர்.
மிகக் குறுகலான இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும்போது, ஏற்கனவே சாலை ஓரம் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்படவில்லை. மின்கம்பங்களை அப்படியே விட்டுவிட்டு சாலையை விரிவாக்கம் செய்துள்ளனர். மேலும், சில பழமை வாய்ந்த மரங்களும் அப்படியே விடப்பட்டு விரிவாக்கப் பணிகள் நடந்துள்ளன. இதனால், மின் கம்பங்களும், மரங்களும் சாலையின் நடுவே இருப்பது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிவேகமாக இந்த சாலையில் வரும் வாகனங்கள், குறிப்பாக இரவு நேரத்தில் வரும்போது இந்த மின்கம்பங்களிலோ மரங்களிலோ மோதி விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே, தங்களின் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த முறையற்ற சாலை விரிவாக்கப் பணிகளால் மேலும் விபத்துகள் அதிகரிக்குமோ என கவலையாக உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பல தரப்பினரும் முறையிட்டும் யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என மக்கள் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பங்களையும் மரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.