போடியின் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 18, 2023, 12:49 PM IST
தேனி: போடிநாயக்கனூர் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் உள்ள கொட்டகுடி குரங்கணி, பிச்சாங்கரை, போடி மெட்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், போடியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான கொட்டங்குடி ஆற்றில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள கண்மாய் குளங்களின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்படக்கூடிய அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், நேற்று இரவு பெய்த மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் அனைத்தும் அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் இருந்து போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்குச் செல்லும் மதகுப் பகுதியை அடைத்துள்ளது.
இதனால் கண்மாய்களுக்கு நீர் செல்ல முடியாமல் கொட்டகுடி ஆற்றின் மூலம் வைகை அணைக்கு நீர் சென்று வருகிறது. போடிநாயக்கனூரைச் சுற்றியுள்ள மீனாட்சி அம்மன் கண்மாய், பங்காரு சாமி குளம் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தேனியில் பெய்த கனமழையால் போடியின் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.