உயிருக்குப் போராடிய காட்டெருமை.. உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த வனத்துறையினர்.. தென்காசியில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..! - தென்காசியில் கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு
🎬 Watch Now: Feature Video
Published : Dec 26, 2023, 11:12 PM IST
தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வண்டாடும் பொட்டல் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள 5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், கடையநல்லூர் வனத்துறையினர் மற்றும் செங்கோட்டைத் தீயணைப்புத் துறையினர் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டெருமையை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஒருங்கிணைந்து கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். இந்த நிலையில், ஆவேசத்துடன் இருந்த காட்டெருமை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களைத் தாகத் தொடங்கியது. முட்டி காயம் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வனக்காப்பாளர் ஒருவர் காட்டெருமையிடம் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய நிலையில் மேக்கரை வனவரான அம்பலவாணன் என்பவர் மிகப் பெரிய அளவிலான கம்பு ஒன்றை எடுத்து காட்டெருமையை அச்சுறுத்தி விரட்டினார்.
மேலும், உயிருக்குப் போராடிய காட்டெருமையை மீட்கச் சென்ற வனத்துறையினர் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கிருந்தவர்களைப் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.