"ஐந்தாண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை" - ஸ்னோலின் தாயார் குமுறல்! - ஸ்னோலின் தாயார்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினம் வரும் 22ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஐந்தாண்டுகள் கடந்தும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இன்று(மே.15) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, உயிரிழந்த ஸ்னோலின் தாயார் உட்பட பலர், "துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும். ஸ்டெர்லைட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். முன்னதாக ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.