கோவில்பட்டியில் கொட்டி தீர்த்த மழை...ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது வந்தது. பகல் மட்டுமல்லாமல் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப். 1) மாலை வேளையில் லேசான சாரல் மழையுடன் மழை கொட்டியது. பின்னர், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த பலத்த மழை காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் மழைநீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி மூப்பன்பட்டி , பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், நாலட்டின் புதூர் உள்ளிட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது. நீண்ட நாளைக்கு பிறகு பலத்த மழை பெய்தலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.