விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் - நடிகர் ராகவா லாரன்ஸ்! - Chennai
🎬 Watch Now: Feature Video
Published : Jan 10, 2024, 4:43 PM IST
சென்னை: விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகரும் தேமிதிக தலைவருமான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிச.28 ஆம் தேதி காலை காலமானார். இது அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், திரையுலகினர், பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது வரை ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து விஜயகாந்த் மறைவுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், “பிரேமலதா விஜயகாந்தின் சகோதரி விஜயகாந்தின் மகன்களின் எதிர்காலத்திற்கு உங்களை போன்றவர்கள் தான் உதவ வேண்டும் என்று என்னிடம் கூறினார். அவர் சொன்ன வார்த்தை என்னை உறுத்தியது.
எனக்கும் விஜயகாந்த் மிகவும் பக்க பலமாக இருந்தார். அதனால் அவர் மகனின் எதிர்காலத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என நினைக்கிறேன். எனவே விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராக உள்ளேன்” என கூறியுள்ளார்.
மேலும் தானும் சண்முக பாண்டியனும் நடிப்பது போன்று இரட்டை ஹீரோ கதைகள் ஏதேனும் இருந்தால் தாராளமாக தன்னிடம் தெரிவிக்கலாம் என்று இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மூத்த மகன் விஜய பிரபாகரனின் அரசியல் பயணத்திற்கும் அவர் வீடியோவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.