சாலை வசதியில்லாததால் தவிக்கும் நெக்னாமலை மக்கள்.. கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடியை அடுத்த மலைப்பகுதியில் நெக்னாமலை என்னும் மலைக் கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நெக்னாமலை மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா கிளி என்பவரது மனைவி ராஜேஸ்வரிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
மலைக் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ராஜேஸ்வரியை டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி வந்து, வள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை ராஜேஸ்வரிக்குச் சுகப் பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
முறையான சாலை வசதி இல்லாததால் இது போன்ற பல நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் உயிர்ச் சேதமும் ஏற்படுவதாகவும் நெக்னாமலை கிராமத்தினர் கூறியுள்ளனர். மேலும் அரசு, உடனடியாக நெக்னாமலை கிராமத்திற்குச் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.