கனரக வாகனங்கள் வரக்கூடாதா? - விவசாயிகளை தாக்கிய ஆய்வாளர் - ஆவேசத்தில் ஒருமையில் பேசிய அவலம்! - வரக்கூடாதென போராட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18070500-thumbnail-16x9-top.jpg)
நெல்லை: விவசாயம் நிறைந்த பகுதி மானூர். இதன் அருகில் உள்ள தெற்குப்பட்டியில் இருந்து மானூர் செல்லும் சாலையில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக தனியார் காற்றாலை நிறுவனங்களுக்கு காற்றாலை நிறுவும் பணிக்காக ராட்சத இறக்கைகள் ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதனால், சாலைக்கு அடியில் மண்ணுக்குள் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படலாம் என்பதால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் காற்றாலைகளுக்கு ராட்சத இறக்கைகள் ஏற்றிக் கொண்டு கனரக வாகனம் ஒன்று தெற்குப்பட்டி மானூர் சாலையில் வந்தது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த வாகனத்தை மறித்து அதன் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். மானூர் காவல் ஆய்வாளர் சபாபதி மற்றும் உதவி ஆய்வாளர் பழனி உள்ளிட்ட போலீசார் அங்கு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், கனரக வாகனங்கள் தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என போலீசாரிடம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், 'அவை உரிய அனுமதி பெற்றுதான் செல்கின்றன என்றும் அவற்றை மறிப்பதற்கான உரிமை உங்களுக்கு இல்லை' என காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் சபாபதி பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மக்கள் ஓட்டுப் போட்டு என்னை பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதால், தானும் மக்களுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபடப்போவதாக கூறி, போலீசாரிடம் ஆவேசமாக பேசி பஞ்சாயத்து தலைவியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, 'நீங்கள் அராஜகம் செய்கிறீர்கள் வேண்டுமென்றால் என் மீது வழக்கு போடுங்கள்' என்று ஆவேசமாக பேசி ஆய்வாளரிடம் சண்டை போட்டார். அதற்கு உதவி ஆய்வாளர் பழனி, 'ஏய் தேவையில்லாமல் பேசுகிறாய்' என்று பஞ்சாயத்து தலைவியை ஒருமையில் பேசினார்.
இதனிடையே, பஞ்சாயத்து தலைவிக்கு ஆதரவாக பேசிய விவசாயி ஒருவரை திடீரென ஆய்வாளர் சபாபதி ஆக்ரோஷத்துடன் தள்ளிவிட்டதால் ஆத்திரமடைந்த சக விவசாயிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களுக்கான சாலையில் கனரக வாகனத்தை அனுமதிக்கக்கூடாது எனப் போராடிய விவசாயியை மீது காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.