ஓசூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருட்டு; வட மாநில இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது! - திருட்டு செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த மோரணப்பள்ளி கிராமத்தில் DMW cnc solution indian private.ltd என்கிற கனரக வாகன என்ஜின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள், லேப்டாப், ஏசி உள்ளிட்டவை திருடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரைத் தொடர்ந்து, ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் உதவி ஆய்வாளர் சபரிவேலன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், அதே ஊரில் வசித்து வந்த வடமாநில இளைஞர்களான சந்தீப்(34), சுபத்(26), தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி(42), ஓசூர் பகுதியை சேர்ந்த சிவராஜ்(20), சுனில்குமார்(19) மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்டோர் உதிரி பாக பொருட்களை திருடியது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, திருடிய பொருட்களை மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள வீட்டில் பதுங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த 8 பேரையும் கைது செய்த ஹட்கோ போலீசார், திருடுபோன பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி என்பவர் திருடிவந்த பொருட்களை வாங்கும் ஸ்கிராப் கடை நடத்தி வந்து இவர்களை ஊக்குவித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.