பள்ளி மாணவர்கள் படியில் பயணம்.. பேருந்தை வழிமறித்த பெருந்துறை எம்.எல்.ஏ!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பெருந்துறை வழியாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் ஈரோட்டிலிருந்து பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி வழியாக ஊத்துக்குளி திருப்பூர் மற்றும் அவிநாசி வழியாகக் கோவை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று அதிக பயணிகளுடன் விஜயமங்கலம் வழியாகச் சுங்கச்சாவடி சென்றது அப்போது விஜயமங்கலம் வழியாக பெருந்துறைக்கு வந்து கொண்டிருந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேருந்தின் படிக்கட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிகள் தொங்கிக்கொண்டு செல்வதை பார்த்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மேலும் பேருந்தின் முன்பாக தனது காரை நிறுத்தி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் இதுபோன்று பயணிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்று பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது. மேலும் இதுபோன்று தொடர்ந்து அளவுக்கு அதிகமாகப் பயணிகளை லாப நோக்கத்துடன் ஏற்றுச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தனியார் பேருந்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதைக் கண்டு வீடியோவாக ஒளிப்பதிவு செய்தது மட்டுமல்லாமல் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைச் சட்டமன்ற உறுப்பினரே எச்சரிக்கை விடுத்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.