கோயில் பந்தல் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் திருப்பம்.. தென்காசியில் நடந்தது என்ன?
🎬 Watch Now: Feature Video
தென்காசி: குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்துமாலைபுரம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு வேறு தரப்பினர்களுக்கு இடையே பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஒரு தரப்பினர் நடத்திய கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடிக்கப்பட்டதில் மற்றொரு தரப்பினர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், பந்தல் முழுவதுமாக எரிந்து நாசமான நிலையில், மற்றொரு தரப்பினரைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குற்றாலம் காவல் நிலையத்தில், பட்டாசு வெடித்து பந்தலைத் தீப்பிடிக்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நபர்களைச் சொந்த ஜாமினில் விடுவித்த நிலையில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட நபர்கள் தென்காசி -மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டம் வீரியம் அடையும் முன் போராட்டத்தினை கைவிடுமாறு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.