சில்லரை வாங்குவது போல் நடித்து ரூ.6 லட்சம் தங்கம் அபேஸ்! வீடியோ வைரல்! - today latest news
🎬 Watch Now: Feature Video


Published : Oct 2, 2023, 11:00 AM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி, திம்மம்பேட்டை காவல் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருபவர் கோவிந்தசாமி. இவரது மனைவி இந்துமதி. இவர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி அன்று அடகுக் கடையில் இருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குவது போல் இந்துமதியை திசை திருப்பி, கடையில் இருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் தங்கத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
உடனடியாக இது குறித்த சிசிடிவி காட்சிகளுடன் திம்மம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று இந்துமதி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இப்புகார் மீது எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் 5 மாத காலமாக முதல் தகவல் அறிக்கையும் வழக்கும் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த கொள்ளை சம்பவம் குறித்தும், திம்மம்பேட்டை போலீசாரின் அலட்சியமாக செயல்படுவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்துமதி புகார் அளித்து உள்ளார். மேலும் இந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.