ரயில்களில் தீ விபத்தை தவிர்ப்பது குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விழிப்புணர்வு..! - raja
🎬 Watch Now: Feature Video
Published : Nov 8, 2023, 5:12 PM IST
மதுரை: ரயில்களில் தீ விபத்தைத் தவிர்ப்பது குறித்து மதுரை ரயில் நிலையத்தில் இன்று (நவ.8) சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்து கொண்டு, பயணிகளிடம், தீ விபத்தைத் தவிர்ப்பது குறித்த துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் பயணிகளிடம் பேசும் போது, ரயில்களில் பட்டாசு, கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என்றும், மீறிக் கொண்டு சென்றது கண்டறியப்பட்டால் இந்திய ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும், விபத்தால் ஏற்படும் நஷ்டங்களுக்கும் பொறுப்பேற்க நேரிடும் என்று கூறினார்.
இந்நிகழ்வின் போது, முதல் நிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் சுபாஷ், உதவி பாதுகாப்பு அதிகாரி சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி கோபிநாத் மற்றும் ரயில்வே ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.