பழனி கோயில் நன்கொடையாளர்கள் இலவசமாக கொடுத்த பைகளுக்கு விலை - பக்தர்கள் அதிருப்தி - Dindigul district news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனிக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாளர்கள் இலவசமாக கொடுத்த பைகளை கோவில் நிர்வாகம் விற்பனை செய்து வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கருதப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம், ஒரு சாமி படம் அடங்கிய மஞ்சப்பை இலவசமாக தரப்பட்டது. இது வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கும்பாபிசேகம் முடிந்தும் சில நாட்களாக பைகள் இலவசமாகவே பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், கும்பாபிஷேகம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தற்போது நன்கொடையாளர்கள் இலவசமாக வழங்கிய பைகளை கோயில் நிர்வாகம் விற்பனை செய்யும் நோக்கில், பை ஒன்று பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்கொடையாளர்கள் இலவசமாக வழங்கிய பைகளை இலவசமாகவே வழங்க வேண்டும் எனவும், அதனை விற்பனை செய்யக்கூடாது எனவும் பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.