வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - விவசாயிகள் மகிழ்ச்சி!
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், அணைகள் உள்ளிட்டவைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக, நீரின்றி வறண்டு காணப்பட்ட வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வரத் தொடங்கியது.
தென்மேற்கு பருவமழைத் தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில், வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் போதுமான மழை பெய்யாத நிலையில், வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து வற்றிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், வைகை ஆறு உற்பத்தியாகும் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக வைகை ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இது தேனி மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.