சபரிமலை பக்தர்களுக்கு பிஸ்கெட்டுகள்..! ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு..! - ஐயப்ப பக்தர்களின் பாதையாத்திரை
🎬 Watch Now: Feature Video
Published : Dec 3, 2023, 5:09 PM IST
தஞ்சாவர்: சபரிமலை கோயிலில், ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பில், ஒரு லட்சம் ரூபா மதிப்பிலான 20 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான நிகழ்ச்சி கும்பகோணத்தில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பினராக வந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பகோணத்தில் இருந்து வேன் மூலம் பம்பை கொண்டு செல்லப்படும் இந்த பிஸ்கெட்டுகள், அங்கிருந்து டிராக்டர் மூலம் சன்னிதானம் அருகே உள்ள ஐயப்ப சேவை சங்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் என சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், 40 ஆண்டுகளாக தஞ்சை மாவட்ட ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், ஜனவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்படுவதாகவும், குறிப்பாகத் தமிழ் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தான்தோன்றி மாரியம்மன் கோயிலில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, இம்மாதம் 17ஆம் தேதி முதல் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.