மீன் பிரியர்கள் அதிர்ச்சி; குழி தோண்டி புதைக்கப்பட்ட மீன்கள்..சோதனையில் தெரியவந்த உண்மை! - chemical mixed fish sold in market
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ஓசூர் மீன் விற்பனை மையங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வள இயக்குனர் ரத்தினம் உத்தரவின் பேரில், ஓசூர் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று (மே 28) அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் ஓசூர் - பெங்களூர் வெளிவட்டச் சாலை மற்றும் உள்வட்ட சாலைப் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை செய்யும் கடைகளில் அதிரடியாக திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 20 கடைகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு செயல்பட்டு வந்த இரண்டு மீன் விற்பனை மையங்களில் இருந்து சுமார் 15 கிலோ எடையுள்ள கெட்டுப்போன இரால் மற்றும் அயிலை மீன்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
எனவே, அந்த கெட்டுப்போன மீன்களை உடனடியாக பறிமுதல் செய்து அப்புறப்படுத்திய அதிகாரிகள், அவற்றை குழி தோண்டி புதைத்தனர். மேலும், மீன்வளத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், 'ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே மீன் விற்பனை மைய உரிமையாளர்கள், மீன்களை கொள்முதல் செய்யும் பொழுது அவைகள் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பின்னரே வாங்கி விற்பனை செய்ய வேண்டும்' என தெரிவித்தனர்.
மேலும், இது போன்று கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், விற்னையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மீன் விற்பனைக்கான முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும் மீன் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இவ்வாறு கெட்டுப்போன மீன்களை ஐஸ்க்கட்டியில் பதப்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் மீன் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: உதகை 63-ஆவது பழக் கண்காட்சியில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு மரியாதை!