வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு! - மதுபோதையில் ரகளை
🎬 Watch Now: Feature Video


Published : Jan 5, 2024, 11:50 AM IST
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், மதுபானக் கடையின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டு, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த மதுபோதை ஆசாமியிடம் விசாரணை நடத்தும்போது அவர் மது போதையில் மயங்கியது போல் நடித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த மதுபோதை ஆசாமி காவல்துறையினர் அருகில் இல்லாததை அறிந்து, மீண்டும் ரகளை செய்யத் தொடங்கி உள்ளார். பின்பு, மீண்டும் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், மது போதை ஆசாமியை அடக்க முயற்சி செய்தும் அவர் அங்கிருந்து சாலையில் வேகமாக நடந்து சென்றுள்ளார்.
பரபரப்பான சாலையின் நடுவே வாகனங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்த மதுபோதை ஆசாமி, திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நின்று கொண்டு, “இப்ப வாங்கடா பாத்துக்கலாம்” என்று கத்தியபடி சாலையில் படுத்துள்ளார்.
இதனையடுத்து சார்பு ஆய்வாளர் பாண்டியன் அங்கு இருந்தவர்களிடம் கைலி ஒன்றை வாங்கி, போதை ஆசாமியின் உடம்பில் சுற்றி, அருகிலுள்ள கட்டடத்திற்கு சக காவல்துறையினரின் உதவியோடு அழைத்துச் சென்றுள்ளார்.