ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்.. ராசிபுரத்தில் நடந்தது என்ன?
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்: ராசிபுரம் ஒன்றியம் கூனவேலம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் வேலை நாளான நேற்று பொதுமக்கள் புகார் கொடுக்க சென்ற போது அலுவலகம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு மாலை அணிவித்து வாழைப்பழங்கள் வைத்து கற்பூரம் வைத்து அஞ்சலி செலுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூனவேலம்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ள நிலையில் ஊராட்சியின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சாந்தி ஆறுமுகம் உள்ளார். ஊராட்சி செயலாளராக ராமன் என்பவர் உள்ளார்.
ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி ஊராட்சியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பைக் கடந்த ஒரு வருடங்களாக அகற்றாததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்திற்கு, பாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்றாததைக் கண்டித்தும் புகார் மனு கொடுக்க வந்தனர்.
இந்நிலையில் வேலை நாளான நேற்று அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்திற்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள் புகார் மனுவை அலுவலக வாசலில் வைத்துவிட்டுச் சென்றனர்.