மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து முதலமைச்சரின் பதில் என்ன?: கள் இயக்க நல்லுசாமி கேள்வி!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பழனியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாட்டில் பனை சார்ந்த உணவுப் பொருட்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். குறிப்பாக பழனி பஞ்சாமிர்த தயாரிப்பில் கருப்பட்டி பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கள்ளுக்கான தடையை நீக்கி இருந்தால் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்காது.
ஆனால், பீகாரில் கள்ளுக்கு அனுமதி உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். எனவே பீகாரை போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளுக்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாஜக இப்போது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே கள்ளுக்கு ஆதரவு அளித்தனர்.
மேலும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது, பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் முக்கியமானது மேகதாதுவில் அணை கட்டுவது என்பது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். எனவே அவர்கள், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது பற்றி என்ன கூற உள்ளனர்?.
பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவது போல், காவிரியில் தினந்தோறும் நீர்ப்பங்கீடு என அறிவிக்கப்பட்டு இருந்தால் எவ்விதப் பிரச்னையும் இருக்காது. தற்போதைய ஆட்சியில் இயற்கை வளங்கள் அதிகமாக கடத்தப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.