மதுரை அருகே சுமார் 30 மயில்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா? - வனத்துறை விசாரணை
🎬 Watch Now: Feature Video
மதுரை: மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே உள்ளது பூலாங்குளம். இப்பகுதியில் உள்ள வயல் வெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 18 மயில்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, வயல்வெளி அருகே கிடந்த நெல்மணிகளை எடுத்து அவைகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்று (மார்ச்.8) மயில்கள் உயிரிழந்து கிடந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மேலும் 15-க்கும் மேற்பட்ட மயில்களின் உடல்களைக் கைப்பற்றி உள்ளனர்.
இவ்வாறு கடந்த மூன்று நாட்களில் 35-க்கும் மேற்பட்ட மயில்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மயில்கள் வயல்வெளிகளை பாழாக்குகின்றன என்பதற்காக விவசாயிகள் எவரேனும் விஷம் வைத்துக் கொன்றார்களா? என்ற அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.