வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேலான ஆடுகள் பலி.. சங்கரன்கோவில் அருகே பயங்கரம்
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாரத்தில் ஆடுகள், மாடுகள் மேய்ப்பதையும் விவசாயத்தையுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இதனால், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைப் பொறுத்த அளவில் அதிகப்படியான விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், செந்தட்டியாபுரம் கிராமத்தில் சரவணன் என்பவர், தனது விவசாயத் தோட்டத்தில் ஆட்டுப்பண்ணை அமைத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி, வளர்த்து வந்துள்ளார். இவரது விவசாயத் தோட்டத்தைச் சுற்றியும் முள் கம்பியால் தடுப்பு வேலியும் அமைத்துள்ளார்.
இந்த நிலையில், அவர் நேற்றிரவு ஆடுகளுக்கு தீனி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனிடையே, அந்த வேலிகளின் அடியில் கால்களால் குழிப்பறித்து ஆட்டுப் பண்ணைக்குள் ஊடுருவி வந்த ஐந்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள், இன்று (ஜூன் 15) அதிகாலை இரண்டு மணியளவில் ஆட்டுப் பண்ணைக்குள் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்து குதறின.
இதில் 24 செம்மறி ஆடுகள், வெள்ளாடு என 32 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்குப் போராடிய நிலையில் உள்ளன. தோட்டத்தின் உரிமையாளர், அதிகாலை 5 மணியளவில் தோட்டத்திற்குச் சென்று ஆடுகளுக்கு தீனி வைப்பதற்காக வந்து பார்த்தபோது, ஆடுகள் அனைத்தும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு, ஆட்டுக்கொட்டகையின் அருகே சென்று பார்த்த பொழுது வெறிநாய்கள் கடித்திக் குதறி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதையும் கண்டு மேலும், அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து சங்கரன்கோவில் வருவாய் வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விஏஓ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த ஆடுகளைப் பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த ஆடுகள் உடற்கூராய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வெறிநாய் கடித்ததில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இனிமேல் தங்களது ஆடுகளையும் வெறிநாய்கள் கடித்து விடுமோ என அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தங்களது ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பாக வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இத்தகைய வெறிநாய்களைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, கோழிப் பண்ணைகள் அதிகமாக உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.