சுவாமிமலை கோயிலுக்குள் செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டுச்செல்ல இன்று முதல் தடை!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 25, 2023, 6:52 PM IST
தஞ்சாவூர்: முருகப் பெருமானின் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ் வருடங்களின் தேவதைகள் முருகனை பிரார்த்தனை செய்து, இக்கோயிலின் 60 படிகளாக உள்ளன என்று ஐதீகம். தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில், இந்த 60 படிகளுக்கும் நடத்தப்படும் திருப்படி பூஜை மிகவும் பிரசித்திபெற்றது.
இத்தகு பெருமை வாய்ந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது செல்போன், கேமராக்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செப் - 25 திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்பட்ட இந்தத் தடையினால், தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், தங்களது செல்போன்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விட்டு சென்றனர்.
தெற்கு கோபுர வாயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க ரூபாய் 5 செலுத்தி, பக்தர்கள் ரசீதைப் பெற்றுக்கொண்டனர். தரிசனம் முடித்து திரும்பும் போது, ரசீதைக் காட்டி திரும்ப செல்போன்களை பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.