பெண்கள் உடை மாற்றும் அறையின் ஏசி பாயிண்டில் செல்போன்.. பிரபல துணிக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - crime news
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி: பிரபல துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய செல்போன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள், கூச்சலிட்டு அலறி வெளியே வந்த சம்பவம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் நகரில் கடந்த ஓராண்டாக பிரபல தனியார் நிறுவனத்தின் துணிக்கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கு நேற்று முன்தினம் (ஜூன் 25) இரவு இரண்டு பெண்கள் ஆடை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரண்டு பெண்களும் தாங்கள் வாங்கிய ஆடைகள் சரியான அளவில் உள்ளதா என ட்ரையல் ரூமுக்கு சென்று அணிந்து பார்க்க சென்றுள்ளனர். அப்போது ட்ரையல் ரூமில் உள்ள மேல் பகுதியில் ஏசி பாயிண்ட்டில் செல்போன் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இரு வாடிக்கையாளர்கள் கூச்சலிட்டதை கண்டு அருகாமையில் இருந்த பெண் ஒருவர் உடனடியாக உள்ளே சென்று, ஏசி பாயிண்டில் வைக்கப்பட்டிருந்த செல்போனை லாவகமாக வெளியே எடுத்துச் சென்றார். இது குறித்த தகவல் பரவியதால் துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் உடனடியாக அந்த பெண்ணை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இது குறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு, அங்கு, ஊழியர்களிம் விசாரணை நடத்தினார். மேலும், செல்போனை எடுத்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் பட்டன் போன் என்பதால் அதில் இருக்கும் மெமரி கார்டை எடுக்க முயன்றபோது அதில் மெமரி கார்டு இல்லை என தெரியவந்தது. மெமரி கார்டு ஏதும் இல்லாததால், அந்த மெமரி கார்டை அப்பெண் எடுத்து விட்டாரா என்கின்ற கோணத்தில் காவல் துறையினர் அப்பெண்ணிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல் துறையினருக்கு கிடைத்த செல்போனை வைத்து, உண்மையில் செல்போன் வெளிநபரால் கொண்டு வந்து கடையில் வைக்கப்பட்டதா? அல்லது ஊழியர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் இரண்டாம் கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பொது சிவில் சட்ட விவகாரம் : பிரதமர் மோடிக்கு திமுக, காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் கண்டனம்!