காட்பாடி அருகே புது இ.எஸ்.ஐ மருத்துவமனை - அமைச்சர் துரைமுருகன் தகவல் - மு க ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காட்பாடி பிரம்மபுரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மத்திய அரசின் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கபடும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பிரம்மபுரத்தில் அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நேற்று (மார்ச்.11) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நியாய விலை கடை, மற்றும் கார்ணாம்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடியையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தொகுதிக்கு பல பள்ளிக் கட்டடங்கள், நியாய விலைக்கடைகள் போன்றவற்றை ஏற்படுத்தியதாகவும் விரைவில் மேலும், 100 படுக்கைகளுடன் காட்பாடியில் அரசு மருத்துவமனை ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாலாற்றிலிருந்து மற்றும் காவிரி கூட்டு குடிநீரையும் மக்களுக்கு வழங்கி உள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், இங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒரு இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், அதனை பிரம்மபுரத்தில் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் அருகில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், ஏழை எளிய மக்களும் அதிநவீன மருத்துவ வசதிகளை எளிதில் பெற முடியும் என்று கூறினார்.