மகாளய அமாவாசை - ஶ்ரீரங்கம் காவேரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! - திருச்சி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 14, 2023, 5:04 PM IST
திருச்சி: மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் உள்ள புண்ணிய தலங்கள் மற்றும் ஆறு, குளங்ளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்து சமயத்தில் மகாளய அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் கொண்டு அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடித்து நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். தை, ஆடி மாதங்களைத் தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும்.
மற்ற நாட்களில் திதி கொடுக்க மறந்தவர்களும் இந்த நாளில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கலாம் என்பது இந்து மக்களின் ஐதீகம். அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி ஶ்ரீரங்கம் காவேரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில், காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.
இதில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்சி புறநகர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலையில் இருந்து வந்தே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் அம்மா மண்டபம் சாலையில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.