வீடியோ: திருவிடையார்பட்டி சிவன் கோயிலில் 750 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டம் திருவிடையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருமூலநாதர் கோயில். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்த திருத்தலத்தில் அருள் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் திருமூலநாதர் சுவாமியை வழிபட்டால் அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த திருக்கோயிலானது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகின்றது.
இந்த கோயிலில் 750 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் நடைபெறவில்லை. ஆகவே, கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. கடந்த மூன்று நாட்களாக யாக வேள்வி பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. அதன்பின் பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் குடங்களில் நிரப்பி, யாகசாலையில் பூஜிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க புனித நீரானது மூலவர் சுவாமிகள் எழுந்தருளிய கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன்பின் மற்ற 5 கோபுரங்களின் கலசங்கள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மூலவர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதனிடையே பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை காண புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.