கீழக்குயில்குடி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
🎬 Watch Now: Feature Video
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மலையடி கருப்பசாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் அமைந்துள்ள கீழக்குயில்குடி மலையில் தமிழக தொல்லியல் துறை சார்பாக ஆய்வு நடத்தப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுகை மற்றும் பழமையைப் பறைசாற்றும் விதமாகப் பாறைச் சிற்பங்கள் அமைந்துள்ள சுற்றுலாத்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இவ்வளவு புகழ்பெற்ற பிரம்மாண்டமான மலையடி வாரத்தில் அமைந்துள்ள மலையடி கருப்புசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் விளாச்சேரி, வடிவேல் கரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பூஜையில் வைத்த கலச தீர்த்தங்களைக் கோவிலில் உள்ள கருப்பசாமி, முனியாண்டி, விநாயகர், அம்மன் சன்னதியில் உள்ள மகா கும்பத்திற்கு ஊற்றிச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இவ்விழாவின் போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு, எதிரொலித்தது. விழாவின் தொடர்ச்சியாகக் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டன.