ஊட்டியை கண்டு அஞ்சும் சுற்றுலாப் பயணிகள்.. விலை உயர்ந்த விடுதிக் கட்டணங்களால் அவதி - ஊட்டியில் ரூம் வாடகை
🎬 Watch Now: Feature Video
உதகை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நாள்தோறும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், உதகையில் 500க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையானோர், இங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம். இதற்காக இணையதளத்தில் முன்பதிவும் செய்து கொள்கின்றனர். இந்த நிலையில், தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, விடுதிக் கட்டணம் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் உதகைக்கு வரக் கூடிய சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், விடுதிக் கட்டணம் மட்டுமின்றி, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு சாப்பாடு 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், உணவு தரமற்று இருப்பதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.