புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 4:10 PM IST
திருவண்ணாமலை: புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் இன்று (ஜன.01) ஆங்கில புத்தாண்டையொட்டி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இன்று ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால், அதிகாலையிலேயே அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது.
மேலும், உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் உற்சவமூர்த்திக்கு, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டுச் சிறப்புத் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.