கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கோலாகல துவக்கம்! - கும்பகோண தூய அலங்கார அன்னை பேராலயம்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் நூற்றாண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இந்த பேராலயத்தில் வருடந்தோறும் ஆண்டுப் பெருவிழா, 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல, இவ்வாண்டும் நேற்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) மாலை அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனித திருக்கொடி, பேண்டு வாத்தியங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு மறைமாவட்ட முதன்மைகுரு முனைவர் அமிர்தசாமி, திருக்கொடியை புனித நீர் தெளித்து, சாம்பிராணி புகை போட்டு புனிதம் செய்து ஜபித்த பிறகு, உயர்ந்த கொடிமரத்தில் வான வேடிக்கைகளுடன், மாதா உருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு போராலய வளாகம் முழுவதும் அழகிய பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து முதன்மை குரு தலைமையில், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர். விழா நாட்கள் அனைத்திலும் மாலை விசேஷ திருப்பலியும், மறையுரையும் நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14ம் தேதி திங்கட்கிழமை இரவு மறைமாவட்ட ஆயர் எப் அந்தோணிசாமி தலைமையில், தூய அலங்கார அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.
பின்னர், 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தன்று காலை திருப்பலியும், தேசிய கொடி ஏற்றுதலுடன், சுதந்திர தின கொண்டாட்டங்களும், மாலை தேவ நற்கருணை ஆசிர் மற்றும் கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்காண ஆண்டு பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.