கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு..! 9வது நாளாக தொடரும் தடை!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 28, 2023, 11:02 AM IST
தேனி: கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அருவில் குளிக்க 9வது நாளாக வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்கானல், வெள்ளக்கெவி மற்றும் கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் கடந்த 8 தினங்களுக்கு முன்பாக குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆர்பரித்து நீர் அருவியில் கொட்டுவதால் பொது மக்கள் குளிக்க 9வது நாளாக வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி உள்ள நிலையில், குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.