வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கிருஷ்ணகிரி எஸ்பி!
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபமாக அவர்கள் மீதான எதிமறையான கருத்துகளும், சர்சைகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களை சிலர் தாக்குவது போன்றும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டது.
வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பீகார் சட்டப்பேரவையில் பெரும் விவாதத்திற்குள்ளானது. இதைத் தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளிகள் தாக்கப்படவில்லை எனவும், இந்த தகவல் வதந்தி எனவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர் சி.வெ.கணேசன் என பல்வேறு தரப்பிலிருந்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வடமாநிலர்கள் தாக்குதல் வீடியோ குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் இந்தியில் பேசி, தனது சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் பீகார் போலீஸ் மற்றும் அமைச்சர் நிதிஷ்குமாரை இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "நான் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர். எங்கள் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் முன்னர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலேயோ நடந்த வீடியோக்களை பகிர்ந்து, வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என வதந்தியை பரப்பி வருகின்றார்கள்.
தற்போது தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், நன்றாகவும் இருக்கிறார்கள். இது போன்று அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. தற்போது சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆகையால் இது போன்ற கருத்தையோ, வீடியோவையோ பரப்பினால் அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என எச்சரித்துள்ளார்.