மெல்ல விடை கொடு மனமே.. ‘கலீம்’ யானைக்கு ரிட்டையர்மென்ட்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கும்கி யானையான கலீம் யானை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்பட பிற மாநிலங்களுக்குச் சென்று, காட்டு யானைகளை விரட்டுவதில் புகழ் பெற்றது.
இதுவரை சுமார் 100 முறை காட்டு யானைகளை விரட்டச்சென்ற கலீம், ஒரு முறை கூட தோற்றதாக பதிவுகள் இல்லை. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜாவை பிடித்த கலீம், தற்போது 60 வயதை எட்டி உள்ளது. இந்த நிலையில் கலீம் யானைக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வு இன்று (மார்ச் 7) நடைபெற்றது. அதாவது, ஓய்வுபெற்றுள்ளது, கலீம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை இணைச்செயலாளர் சுப்ரியா சாஹூ, வன உயிரின பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உள்பட வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கலீம் யானையால் பிடித்துக்கொண்டு வரப்பட்ட சின்னத்தம்பி மற்றும் அரிசி ராஜா என்கிற முத்து ஆகிய யானைகள் தற்போது கும்கியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்த நிகழ்வில் கலீம் யானைக்கு சரியாக மரியாதை செலுத்தப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.