சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் குவியும் மல்லிகை பூக்கள்… கிலோ ரூ.220 ஆக விலை சரிவு!! - ஈரோடு மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பவானிசாகர், தொட்டமபாளையம், சிக்கரசம்பாளையம், புதுப்பீர்கடவு, தாண்டாம் பாளையம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி, முல்லை சாகுபடி செய்யப்படுகின்றன.
குறிப்பாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முல்லை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கோடைக் காலம் என்பதால் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு மல்லி 10 டன் வரை வரத்து உள்ளது. பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் தங்களின் தேவைக்கு அளவாக மட்டுமே பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.
மீதமுள்ள விற்பனையாகாத மல்லிகை பூக்களை வாசனை திரவிய ஆலைகளுக்கு அனுப்புவதற்காக ஒரு கிலோ 220 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரிப்பால் பூக்களின் விலை குறைந்துள்ள நிலையில் வாசனை திரவிய ஆலைகளுக்கு பூக்களை விற்பதால் லாபம் குறைந்துள்ளதாக மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பூக்கள் உற்பத்தி செலவு, மருந்து தெளிப்பு, மற்றும் போக்குவரத்து செலவு என அதிகமாக செலவு செய்து மல்லிகை பூக்களை உற்பத்தி செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Mother's day: "அம்மாவை கைவிடக் கூடாது" - இளைஞர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!