IT RAID: அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் கே.எஸ்.எம் அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு! - tamil seithikal
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர்
சோதனை இன்று (மே 26) காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு திண்டல் அருகே உள்ள சக்தி நகர் மூன்றாவது தெருவில் செந்தில் பாலாஜியின் உறவினர் சச்சிதானந்தம் என்பவரது வீடு மற்றும் செங்கோடம்பாளையம் பகுதியில் உள்ள கே.எஸ்.எம் டிராஸ்போர்ட் அலுவலகம் ஆகிய இடத்தில் திருச்சி மற்றும் கேரளாவில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சச்சிதானந்தம் என்பவர் ஈரோடு டாஸ்மாக் தலைமை அலுவலக குடோனில் இருந்து மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் போக்குவரத்து ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். அவரது வீட்டில் இன்று அதிரடியாக நுழைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த மடிக்கணினி, கணினி மற்றும் சச்சிதானந்தம் பயன்படுத்தி வந்த டைரி உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சச்சிதானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள் போன்றவற்றின் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவரது வீட்டில் உள்ள பத்திரங்கள், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஈரோடு சக்தி நகர் மற்றும் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!