குப்பை மேட்டில் நெல் சேமிப்பு கிடங்கா? விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, நடுப்பட்டி, சில்வார்பட்டி, சிந்துவம்பட்டி உள்ளிட்ட பகுதியில் 3000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடியின் அறுவடை பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, ஜெயமங்கலம் ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திலும் குப்பைகளை கொட்டி வைக்கப்படும் இடத்திலும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயான கரையிலும், தமிழக அரசு தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வருவதால் கன மழை பெய்து விளைந்த நெல் அறுவடை செய்ய முடியாமல் போய்விடும் என்பதால் விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வயல்களில் இருந்து அறுவடை செய்யப்படும் நெல், கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்க போதிய இட வசதி இல்லாததால் குப்பைகள் கொட்டப்படும் இடத்திலும், பொது மயான இடத்திலும் கொட்டி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்படும் நெல்லை குப்பைகள் கொட்டும் இடத்தில் கொட்டி வைப்பதை தடுக்கவும், நிரந்தரமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.