உணவுக்காக வழிப்போக்கர்களிடம் கையேந்தும் குரங்குகள்; ஆண்டிபட்டி கணவாய் வறட்சியால் அவலநிலை!
🎬 Watch Now: Feature Video
தேனி: மதுரை - தேனி மாவட்ட எல்லை பகுதியான கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, சாஸ்தா கோயில் மலைக் கணவாய். இப்பகுதியில் இருபுறங்களில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. மழைக்காலங்களில் வனப்பகுதிக்குள் சென்று உணவுதேடும் குரங்குகள் கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் பெரும் சிரமப்படுகின்றன.
மேலும் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் குரங்குகளுக்கு வாகனங்களில் செல்வோர் தண்ணீர் பாட்டில்களையும் கொடுத்துச் செல்கின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் வரும் போது உணவை எதிர்பார்த்து மரங்களில் இருந்து கீழே இறங்கி ஓடி சாலைக்கு வரும் குரங்குகள் வாகனங்களை நோக்கி, கை நீட்டி மறித்து உணவை கேட்பது காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.
மேலும் சாலையில் செல்வோர் வீசி எரியும் உணவுப் பொருட்களை எடுப்பதற்காக குரங்குகள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டு செல்லும்போது, ஒன்றை ஒன்று தாக்கி குரங்குகளுக்கு ரத்தக் காயங்களும் ஏற்பட்டு அந்த காயங்களோடு சாலையில் சுற்றித் திரிகின்றன.
ஆண்டிபட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாஸ்தா கோவில் மலைக் கணவாயில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளின் வாழ்வியலைப் பாதுகாக்க வனத்துறையினர் குடிநீர் தொட்டிகளை வனப்பகுதியில் அமைக்க வேண்டும் என்றும், குரங்குகளின் இயற்கை உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.