ரூ. 20க்கு விற்பனையாகும் ஒரு கிலோ தக்காளி - கடலூர் கடையில் அலைமோதிய கூட்டம்..
🎬 Watch Now: Feature Video
கடலூர்: தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்றத்துடன் காணப்பட்டது. இதனால் தமிழக அரசு தக்காளியை கொள்முதல் செய்து சில நாட்கள் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு கொடுத்து வந்தது. இருப்பினும் தக்காளியை தொடர்ந்து வழங்க இயலாத நிலையில், அதனை ரூ.100 முதல் 120 வரை வியாபாரிகள் கடைகளில் விற்பனை செய்து கொண்டே உள்ளனர்.
இதே போன்று கடலூர் மாவட்டத்திலும் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி போன்ற முக்கிய வார சந்தைகளிலும் தக்காளி விலை ரூ. 100 அளவில் இருந்த வண்ணம் உள்ளது. கடலூர் நகரத்தில் இன்று வரை (ஆகஸ்ட் 12) பல கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 80 முதல் 90 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், கடலூர் துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு காய்கறி வியாபாரி மட்டும் அவ்வப்பொழுது தக்காளியை மிகவும் குறைந்த விலைக்கு லாபம் இன்றி கொடுத்து வருகிறார்.
கடலூர் துறைமுகம் சாலக்கரை பகுதியில் உள்ள காய்கறி கடையில், தக்காளி கிலோ ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவியதால், தக்காளியை வாங்க கடைக்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் குவிந்தனர். மேலும், அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தற்போது தக்காளிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து காய்கறி கடைக்காரரிடம் கேட்டபோது, “தக்காளி வரத்து தற்போது அதிகமானதால் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து தக்காளி வருகிறது. மக்கள் ஏற்கனவே தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். காய்கறி கூட வாங்க முடியாத நிலைமை உள்ளதால், தற்போது தக்காளி கிலோ ரூ. 20 என்கின்ற விலையில் விற்கப்படுகிறது. வரும் காலங்களில் மேலும் தக்காளி விலை குறைய கூடும் எனவும் வியாபாரி தெரிவித்தார்.