சிவகங்கை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கள்ளத்தனமாக மது விற்பனை - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? - டாஸ்மாக்
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை வாசலிலேயே கடை திறப்பதற்கு முன்னதாகவே அதிகாலையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அரசிற்குச் சொந்தமான 7514 என்கிற எண் கொண்ட மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே மதுபான கடைகளைத் திறக்க அனுமதியளித்து வருகிறது.
இந்நிலையில் கடை அடைக்கப்பட்டிருப்பதை சாதகமா பயன்படுத்திக்கொள்ளும் சிலர் கடைகள் திறந்திருக்கும்போதே மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு கடை அடைக்கப்பட்டிருக்கும் போது லாப நோக்கத்துடன் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
இந்நிலையில் அதுபோல் விற்பனை செய்யும் நபர் ஒருவர் அதிகாலையிலேயே மதுக்கடை அருகேயுள்ள பூட்டிய பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து மேற்கூரையில் மறைத்து வைத்து மதுப்பிரியர்களிடம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய மதுவிலக்கு காவல்துறையினர் பட்டப்பகலில் பேருந்து நிலையம் என்று கூட பாராமல் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை - கிரிக்கெட் வீரர் அஸ்வின்