ரேசன் அட்டை இருந்தும் அரிசி இல்லை: சர்வர் பிரச்சனையால் ரேசன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்! - மாநிலச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 6:29 PM IST
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மற்றும் அரவட்லா, கொத்தூர் மலைக் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலைக் கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களின் அன்றாட வாழ்வை நடத்தி வருகின்றனர்.
இங்கு உள்ள கிராமங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மலைக் கிராமம் என்பதால் நியாய விலைக் கடைகளில் பல நாட்கள் சர்வர் பிரச்சனை ஏற்பட்டு ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சர்வர் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, இரண்டு நாட்களாக ஊழியர்கள் காலை 6 மணி முதல் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வழங்குவதற்காக வந்துள்ளனர். ஆனால், சர்வர் பிரச்சனை சரியாகாத நிலையில், பல மணி நேரமாகியும் மலைக் கிராம மக்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல், வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல நாட்கள், பல குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு மலைக் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் சர்வர் பிரச்சனை அவ்வப்போது ஏற்படுவதால், பொருட்கள் வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.