இந்தப்பக்கம் பார்த்தா ஜோர் மழை.. அந்தப்பக்கம் பார்த்தாலும் ஜோர் மழை.. நெல்லை மக்கள் குதூகலம்!
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவரமடைந்து வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், மேலப்பாளையம், என்.ஜி.ஓ காலனி, தச்சநல்லூர் என அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்தது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, மாநகரப் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தொடர் மழையின் காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்றைய நாளின் முடிவின் நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 32 மில்லி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மொத்தம் சராசரியாக 67 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.