வேன் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியை உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - Coimbatore
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வஞ்சிமாநகரைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி சத்தியவேணி (53). இவர் பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 8) மாலை சொந்த வேலை காரணமாக சத்தியவேணி, நரசிம்மநாயக்கன்பாளையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அவர் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
தெற்குபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த வேன், கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவேணி ஸ்கூட்டர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் சத்தியவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்தின் அருகில் இருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், சத்தியவேணி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த வேன் அவர் மீது மோதி, அதில் அவர் தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பதிவாகி உள்ளது. அதேநேரம் வேன், தலைமை ஆசிரியை மீது மோதுவதற்கு முன்பு, மற்றொரு இருசக்கர வாகனத்தையும் மோதி உள்ளது. இதில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.