வேலூரில் பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா; ஆல்ரவுண்டராக அருணா ஸ்ரீ தேர்வு! - இரண்டாம் நிலை காவலர்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 6, 2024, 11:04 AM IST
வேலூர்: வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை 284 பெண் காவலர்களுக்கான 7 மாத கால பயிற்சி நிறைவு விழா நேற்று (ஜன.5) நடைபெற்றது. இதில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை, ஐஜி ஆனி விஜயா ஏற்றுகொண்டார்.
இவ்விழாவில் சிறப்பாக பயிற்சியை முடித்த காவலர்களுக்கு ஐஜி முத்துசாமி பதக்கங்களை வழங்கினார். சட்டப் படிப்பில் அருணா ஸ்ரீயும், கவாத்தில் கனிமொழியும், துப்பாக்கி சுடுதலில் ஜனனியும் முதல் பரிசு வென்றனர். அருணா ஸ்ரீ என்பவர் ஆல்ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி முத்துசாமி, 'பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழ்வில் மேன்மையுறும் வகையில் நீங்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவரைத்தொடர்ந்து பேசிய ஐ.ஜி.ஆனி விஜயா, 'வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களாகிய நீங்கள் பயிற்சியை பெற்றுள்ளது மிகவும் சிறப்பானது. தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீட்டை அளித்துள்ளனர்.
அனைத்து காவல் நிலையங்களிலும் தற்போது 50 சதவீதம் பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண் காவலர்கள் பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை நல்ல முறையில் கையாண்டு தீர்வு காண்கின்றனர். எப்போதும் பெண் காவலர்கள், சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.