தருமபுரம் ஆதீனம் கோயிலில் 5,000 கலைஞர்களின் நாட்டியாஞ்சலி! - Dharmapuram adheenam temple
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ சட்டைநாத சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருநிலைநாயகி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பழமையான கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஸ்ரீ திருமலை நாயகி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற மூன்று நிலை வடிவங்களில் சிவபெருமான் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். சட்டை நாதர் திருஞான சம்பந்தருக்கு தனி சன்னதியும் உள்ளது.
பல்வேறு சிறப்புகளை உடைய இந்த கோயிலில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் முடிந்து, இன்று (மே 24) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 20ஆம் தேதி முதல் காலயாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய கால யாகசாலை பூஜையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிவப்பு கம்பளம் விரித்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசி பெற்றார். இதனையடுத்து சீர்காழி சட்டநாதர் கோயிலில் 5 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் நடனமாடும் நாட்டியாஞ்சலி நிகழ்வை ஆளுநர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த மாதம் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் மற்றும் ஐம்பொன் சிலைகளை நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக சீர்காழிக்கு வரும் வழியில் உள்ள அரசூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து கருப்புக் கொடி காண்பித்த 3 பேர் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.