ஆபத்தை உணராத அரசு பள்ளி மாணவர்கள்..! அரசு பேருந்தில் தொங்கியபடி செல்லும் வீடியோ வைரல்..!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்வது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சென்ற மாதம் சென்னையில் ஒரு மாணவன் பேருந்தில் தொங்கியபடி சென்று கீழே விழுந்து இரண்டு கால்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பள்ளி மாணவர்களின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பள்ளிக்கு அனுப்பினாலும், பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவுரைகளைக் கூறினாலும் பள்ளி மாணவர்கள் அதற்குச் செவி சாய்க்காமல் அவர்களிடம் வம்பு செய்வது தொடர்கதையாக மாறியுள்ளது.
இதன் ஒருபகுதியாகத் தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அரசு பேருந்தில் போதிய இடவசதி இருந்தும் பேருந்து நடத்துநர் உள்ளே செல்லும்படி அறிவுறுத்தினாலும், அதனைக் கேட்காமல் பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி கால்களைச் சாலையில் தேய்த்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அரசு பேருந்தில் பயணிக்கும் மாணவர்களுக்குத் தகுந்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.