நீலகிரியில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்! - உதகை
🎬 Watch Now: Feature Video
Published : Nov 20, 2023, 11:56 AM IST
நீலகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்கள் வளர்வதற்கும் தேவையான காலநிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில், இங்கு நிலச்சரிவை தடுக்கும் வகையில் மலைச்சரிவிலும், சாலையின் இரு புறங்களிலும் காட்டு சூரிய காந்தி (forest sunflower) விதைகள் தூவப்பட்டதாக கூறுகின்றனர்.
அவை மண்ணின் உறுதித் தன்மையை அதிகரிப்பதுடன் நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. வழக்கமாக டிசம்பர் மாதங்களில் பூக்கும் தன்மை கொண்ட காட்டு சூரிய காந்தி மலர்கள், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூத்துக் குலுங்கத் தொடங்கி உள்ளன. அதாவது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர், உதகை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் கொத்து கொத்தாக இந்த காட்டு சூரிய காந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
வாசமில்லாத மலராக இருந்தாலும், அவை காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில், மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கின்றன. தற்போது உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்களை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒரு நிமிடம் நின்று ரசித்து செல்வதுடன், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர்.