முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை..! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published : Jan 6, 2024, 9:18 AM IST
தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த மாதம் அதி கனமழை பெய்தது. அதேபோல் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 70.44 அடி இருந்த நிலையில், இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணைக்கு வரும் நீர்வரத்து 3106 கன அடியாக அதிகரித்து அதை உபரிநீராக வைகை ஆற்றுப்பகுதிகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு இன்று (ஜன.6) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் வைகை ஆற்றை கடக்கவோ அதன் அருகில் செல்லவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.