தூத்துக்குடியில் ஆழ்கடலில் மூழ்கி சங்கு குளித்த மீனவர் மூச்சு திணறி உயிரிழப்பு! - மீனவர் மரணம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 15, 2023, 2:17 PM IST
தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (டிச.14) காலை ஜலாலுதீன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி அருகே பூபாலராயபுரத்தைச் சேர்ந்த சம் சுதீன் மகன் சபர்மைதீன் (33) உள்ளிட்ட 10 மீனவர்கள் சங்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சபர்மைதீன் கடலில் 12 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இறங்கி சங்கு எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சக மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆழ்கடலில் இருந்து மேலே படகுக்கு தூக்கி உள்ளனர். ஆனால், அவர் கடலிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சபர்மைதீனின் உடலை சக மீனவர்கள் மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்து, பின்பு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்கடலில் சங்கு குளிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.